Thursday, August 25, 2016

தினம் ஒரு பாசுரம் - 77

தினம் ஒரு பாசுரம் - 77

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்

உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட,

கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி, அவனை உள்ளத்து

எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே.


---பெரிய திருமொழி (திருமங்கை மன்னன்)
___________________________________________________________
இன்று கிருஷ்ண ஜெயந்தி! ஆகையால், ஒரு ஒரு கிருஷ்ணத் தலப் பெருமாள் பாசுரத்தை அனுபவிப்போம். இது திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாளை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தருளிய ஓர் அற்புதமான பாசுரம்.

திருக்கண்ணமங்கை திவ்யதேசம் பஞ்ச கிருஷ்ணத் தலங்களில் ஒன்றாகும்.  மற்றவை
லோகநாதப் பெருமாள் கோவில் -     திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில்    -          கபிஸ்தலம்
நீலமேகப்பெருமாள் கோவில்  -   திருக்கண்ணபுரம்
உலகளந்தபெருமாள் கோவில்   -  திருக்கோவிலூர்


இத்திருத்தலம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூரை அடுத்து இருக்கிறது. இத்தலத்தைப் பற்றிய இப்பாசுரம், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில், ஏழாம்பத்தில், பத்தாம் திருமொழியில் உள்ளது.  இப்பதிகத்தில் இருக்கும் பாசுரங்கள் அனைத்தும் மிகச் சிறப்பு வாய்ந்தவை.  பதிகத்தின் பத்து பாசுரங்களில், திருக்கண்ணமங்கைப் பெருமானின் பெருங்கீர்த்தியும், கல்யாண குணங்களும் மிக நேர்த்தியாக வெளிப்படும். மற்ற பாசுரங்களையும் வாசியுங்கள், எளிமையானவை, பொருள் எளிமையாக விளங்கும்!

தல வரலாறு

மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கு அமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பதும் பெருமாள், பிராட்டியை திருமணக் கோலத்தில் தினம் கண்டு வழிபட முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர் என்பதும் தொன் நம்பிக்கை.

பத்தராவி என்ற மற்றொரு மூலவர்  திருநாமத்துக்கு காரணம் உண்டு.
பத்தராவி = (பக்தர்+ஆவி) அதாவது, பக்தர்களுக்கு வேகமாக வந்து அருளுபவர் என்ற பொருளில் அமைந்தது.
தாயார் - அபிஷேகவல்லி

பாசுரப்பொருள்:

மண்ணாடும் விண்ணாடும் - பூவுலகையும், (இமையவர் உலகம், சுவர்க்கம் போன்ற 6) வான் உலகங்களையும்
வானவரும் தானவரும் - தேவர்களையும், அசுரர்களையும்
மற்றுமெல்லாம் -  இன்னபிற உயிர்களையும்/உயிரில்லாப் பொருள்களையும்
உண்ணாத பெருவெள்ளம் - அடங்க மாட்டாமல் பெருகி வந்த பிரளயம் பெருவெள்ளம்
உண்ணாமல் - அடித்துச் சென்று அழித்து விடாதபடி
தான் விழுங்கி  - தான் (அவ்வனைத்தையும்) விழுங்கி
உய்யக் கொண்ட - (தன் வயிற்றில் வைத்துக்) காத்தருளிய
கண்ணாளன் - பரம அருளாளனும்
கண்ணமங்கை நகராளன் - திருக்கண்ணமங்கை நகரில் வீற்றிருக்கும் தலைவனும் (ஆன எம்பெருமானின்)
கழல் சூடி -  திருவடிகளில் தலை பதித்து
அவனை உள்ளத்து எண்ணாத - அவனை (அந்த பக்தவத்சலனை) சிந்தையில் வைக்காத
மானிடத்தை - (பயனற்ற பிறவி எடுத்த பூவுலக) மாந்தரை
எண்ணாத போதெல்லாம் - எண்ணப் பெறாத சமயமெல்லாம்
இனியவாறே - (எனக்கு) இனிதாகவே கழியுமே!

பாசுரக்குறிப்புகள்:

திருமங்கை மன்னனே ஓர் ஆணழகர். ஆழ்வார் வடிவழகை மணவாள மாமுனிகள் வடிவழகு சூர்ணிகையில் விவரிப்பது அற்புதமாக இருக்கும்... அதில் ஒரு பகுதியைத் தருகிறேன்.


அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும்,
ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதித்த நெற்றியும், நெறித்த புருவமும்
சுருண்ட குழலும், வடிந்த காதும் அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும்,
திரண்ட தோளும் நெளித்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும்

தொங்கலும் தனி மாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்
சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,
தஞ்சமான தாளினையும், குந்தியிட்ட கனைக்காலும்.....


அத்தகைய பேரழகரான திருமங்கை ஆழ்வாரே, பக்தவத்சலப்பெருமாளின் வடிவழகில் மயங்கியதன் விளைவே, அன்னார் அருளிய அற்புதப் பாசுரங்களாம். இன்னொரு விஷயம், சென்னை திருநின்றவூர் பெருமாள் திருநாமமும் பக்தவத்சலர் தான். இந்த இரண்டு பெருமாள்களையும் ஒருசேரப் போற்றி ஆழ்வார் அருளிய நற்பாசுரம் ஒன்று உண்டு. திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள், பிராட்டியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, தானே கண்ணமங்கை சென்று ஆழ்வாரிடம் பாடக்கேட்டுப் பெற்ற பாசுரம் இது :-)

ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை,
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்
ஐயனைக் கையிலாழி ஒன்றேந்திய
கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர் நித்திலத் தொத்தினை
காற்றினைப் புனலினைச் சென்று நாடி
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே!


பரமன் ஆனவன், பிரளய காலத்தில், உலகங்களை தன் (பொன்) வயிற்றில் வைத்துக் காத்த செய்தியை பல திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களில் காணலாம். திருமங்கையாழ்வாரே “எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே” என்று தொடங்கும் திருப்பாசுரத்தில்
 “செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக பொன் மிடறு (=வயிறு) அத்தனைபோது அங்கு ஆந்தவன்” 

என்று குறிப்பிட்டு தொடர்ந்து கேலியாக
“காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டு இருந்தவனே” என்று நிறைவு செய்கிறார்.

அதாவது, “இது போல ஓர் அதிசயம் கண்டதுண்டா? ஏழு உலகங்களையும் விழுங்கி பொன் வயிற்றில் வைத்துக் காத்தவனை இப்போது பாரீர்! (கோகுலக் கண்ணனாக) தயிர், வெண்ணெய் களவாடித் தின்று ஆய்ச்சிமார்கள் கட்டிய கயிற்றில் கட்டுண்டு நிற்கிறான் (=கட்டுண்டுக் கிடப்பது போல மாய்மாலம் செய்கிறான் :-))

திருமங்கையாழ்வார் உகந்து போற்றிய திருத்தலம் திருக்கண்ணமங்கை!

“நெருநல் கண்டது நீர்மலை, இன்று போய்
கருநெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே”


என்று மற்றொரு பாசுரத்தில் ”கண்ணமங்கைக்கு ”இன்றே” சென்று வழிபடு” என்று அடியவர்க்கு கட்டளை இடுகிறார்!

“பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை
காணாதார் கண் என்றும் கண்ணல்ல கண்டாமே”


என்று பிறிதொரு பாசுரத்தில் அப்பெருமாளை காணாத கண்கள் கண்களே இல்லை என்றும்  திருமங்கையாழ்வார் அருளுகிறார்!

---எ.அ.பாலா

Tuesday, August 16, 2016

தீபா கர்மாகர் - இந்தியாவின் தீபம்


தனது முதல் ஒலிம்பிக்ஸில் தீபா ”ப்ரோடுனோவா” (Vault-ல் கை ஊன்றி உயர் எழும்பிஅந்தரத்தில் இரண்டரை குட்டிக்கரணங்கள் அடித்து பின் தரையிறங்கி நிலையாக நிற்க வேண்டும். இதை Vault of Death என அழைப்பார்கள்!) எனும் கடினமான, ஆபத்தான Routine-ஐ முயன்றபோது, பார்த்த எனக்கு அச்சமாக இருந்தது. ஒரிரண்டு முறை, அபாயகரமானவற்றை முயன்ற ஜிம்னாஸ்டுகளுக்கு கழுத்து/முதுகு எலும்புகளில் அடிபட்டு, உடல் முழுதும் செயலிழந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அளவிலான அரங்கு என்ற டென்ஷனோ, பயமோ தீபாவின் உடல்மொழியில் சற்றும் தெரியவில்லை.   பளபளத்த அக்கண்களில் அசாதாரண தன்னம்பிக்கை தெரிந்தது. 



”ப்ரோடுனோவா”வை தீபா அற்புதமாகச் செயல்படுத்தினாலும், அந்தக் கடைசிக் கணத்தில், தரை இறங்கி எழுவதற்கு முன் தரையில் அமர்ந்து எழுந்த காரணத்தால், சில தசமப் புள்ளிகளை இழந்தார். இல்லையென்றால், தனது முதல் ஒலிம்பிக்ஸிலேயே வெண்கலமாவது வென்றிருப்பார், இந்தியாவின் தங்கமகள்.  ஆசியாவின் முதல் தர ஜிம்னாஸ்ட் எனப் பெயர் பெற்றிருக்கும் சீனாவின் வாங் யான்-ஐ விட அதிகப் புள்ளிகள் பெற்று, தனது முதல் ஒலிம்பிக்ஸிலேயே ஒரு கலக்கு கலக்கி பலருக்கு ஆட்டம் காட்டி விட்டார், இவர்!

ஆனால், பி.டி.உஷாவின் 4-வது இடம் ஏற்படுத்திய வேதனையை இது ஏற்படுத்தவில்லை! அடுத்த ஒலிம்பிக்ஸில் இப்பெண் தங்கம்/வெள்ளி வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகவே தெரிகிறது. சுதந்திர இந்தியாவில், அதாவது 69 ஆண்டுகளில், ஒலிம்பிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பெண் தீபா கர்மாகர்!  அரசு பெரிய அளவில் தீபாவுக்கு உதவி செய்ததாகத் தெரியவில்லை. இன்னொரு விஷயம், ரியோ 2016 ஒலிம்பிக்ஸ்க்காக தீபா 3 மாதங்கள் மட்டுமே தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். அதையும் மனதில் கொண்டால், MA Political science படித்துக் கொண்டிருக்கும், மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த இப்பெண்ணின் இச்சாதனை மகத்தானது. 

ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிக்கான வசதிகளோ, பயற்சியாளர்களோ இந்தியாவில் பெரிய அளவில் இல்லை. இதை தீபாவின் பயிற்சியாளர், பினேஷ்வர் நந்தியை மட்டம் தட்டுவதற்குச் சொல்லவில்லை. அடுத்த ஒலிம்பிக்ஸில், வால்ட் (vault) தவிர்த்து, பீம் (Beam), தரைப்பயிற்சி ஆகியவற்றில் தீபா இன்னும் சிறப்பு கூட்டவேண்டுமெனில், அவருக்கு அயல்நாட்டுப் பயிற்சியாளரும், அயல்நாட்டளவு வசதிகளும் மிக அவசியம். இதன் மூலம் இன்னும் பல தீபாக்களை உருவாக்கலாம் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.  தங்கம் வென்ற சைமோன் பைல்ஸ் தீபா குறித்துச் சொன்னதோடு, இடுகையை நிறைவு செய்கிறேன்!

"She is special. I wouldn’t have tried to do that (the Produnova). It’s insane" ”The girl has talent. I have known her for quite some time and she is special. She does the Produnova superbly.”

---எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails